Tuesday, May 11, 2010

வாசிப்பு - சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - மொழியாக்கம்


மிகவும் குற்ற உணர்ச்சிகளோடேயே எழுதிய கவிதைகளை இடம் மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதென்பது எளிதென்பதைக்காட்டிலும் உணர்வுகளை உடனே சொல்ல முடிந்த சவுகரியங்கள் மட்டுமே காரணமாயிருக்க முடியும்.


ஆராய்ந்து பார்த்தால் அடுத்தடுத்த பதிவுகளாய் கவிதைகளை இடுவதை தவிர்த்து வந்ததின் பிண்ணணி எனக்கு நானே இட்டுக்கொண்ட வேலியென இப்போது தான் புரிகிறது. ஆனாலும் கவிதையெழுதுவதின் போதை எழுதுபவரை எப்போதும் ஒரு போதத்தில் ஆழ்த்துவதென்பதும் உண்மைதானே..


மிகச்சமீபமாய் இத்தகைய போதம் தரும் புத்தகமொன்றை படிக்க நேர்ந்தது. சிதம்பர நினைவுகள் என்று பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதி ஷைலாஜா அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தப்புத்தகம் என் கைகளில் மொத்தம் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது. பொதுவில் மிகவும் ஆழமான விரும்பத்தக்க எழுத்துக்களை மீள் வாசிப்பிற்கென எடுத்து வைத்தும் சில சமயம் மீண்டும் உடனே வாசித்தும் பழகிய எனக்கு மறுமுறை வாசிக்க வேண்டும் என்ற தேவையற்று வாசித்த வரிகள் தொடர்ந்து கண்களிலும் மனதிலும் நீர்வீழ்ச்சியின் பாதத்தில் தேங்கியிருக்கும் நீர்நிலையென கலங்கலற்றுத் தங்கிவிட்டது.

மிக எளிமையான தினப்படி நிகழ்வுகள் தந்த அவதானிப்புக்களை மிகவும் சரளமாகவும் எந்த ஒரு தாழ்வுணர்ச்சியோ இல்லை அதி உன்னத மிகப்படுத்தல்களோ இல்லாது எவருக்கோ நிகழ்ந்ததென படைக்கும் ஆற்றல் பெற்ற அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை எந்த மொழிகொண்டும் விவரிக்க இயலாது.

என்றோ இளமைக்குறும்பில் வாங்கிய முத்தத்தை நடு வயதில் மிகவும் நிதானாமாய் திருப்பித்தந்த நெகிழ்வான நிகழ்விலாகட்டும், நடுவயதில் தவறிய நிதானத்தை குற்ற உணர்வுகளோடு மீட்டெடுத்து உடனே செயல்படுத்தியதை சொல்லும் பொழுதிலாகட்டும் தன் மேதாவித்தனங்களை எந்த விதத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளாத எளிமை நம் எல்லோராலும் கைக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

மிகவும் வயதான தம்பதியரின் அந்நியோன்யம் கண்டு அதிசயத்த அதே மனது மற்றொரு சம்பவத்தில் தனது துணைவியாரின் சகிப்புத்தன்மையைப்பற்றி சொல்லும் பொழுது எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்என்ற வார்த்தைகள் தரும் அழுத்தம் அபாரமானது. (படைப்புகளுக்குள்ளே படைப்பாளியை பொறுத்திப்பார்க்கும் இந்த பொது புத்தியினை எத்தனை முயன்றும் தவிர்க்கமுடிவதில்லை)

எப்பொழுதும் ஊசாலாடிக்கொண்டிருக்கும் ஆண்மனதின் அடி நாதத்தை எடுத்துக்காட்டும் இடங்களில் தான் கண்டு இரசித்த பெண்மணியின் இறப்பும் அது குறித்த குற்ற உணர்வு தரும் வலியைக் குறிக்கும் இடங்களில் வானாளாவி நிற்பது படைப்பின் உன்னதம் மட்டுமே. இதில் எடுத்துச்சொல்லாமல் விட்ட எத்தனையோ இடங்கள் இனிமேல் வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுச்சென்றதேயன்றி வேறெதும் இல்லை

முன்னுரையில் ஷைலாஜா கூறியிருப்பதைப்போல் மலையாள மொழியினைக் கற்றுத்தேர்ந்தேயாகவேண்டும் என்ற முனைப்பு எழுந்துதான் உள்ளது. இடயே சிலகாலம் மறந்து போயிருந்த அந்த முனைப்பு இப்போது மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. தேடத்துவங்கியுள்ளேன் அரிச்சுவடிப்புத்தகங்களை.

மொழிபெயர்ப்பு என்ற எந்த நெருடல்களும் இல்லாது இந்த புத்தகத்தை படைத்துள்ள ஷைலாஜாவும் ஒரு படைப்பாளியின் அந்தஸ்த்திற்கு இணையானவர் என்று சொன்னால் அது மிகையாகது.


வாழ்வில் ஒரு முறையாவது வாசித்தேயாகவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்வதோடு ஒரு சிலருக்கு தன்னை செதுக்கிக்கொள்ளும் உளியாகவும் கூட ஆகிவிடலாம்.

Thursday, May 6, 2010

மிக நீண்ட கவிதையொன்று.....


மிக நீண்ட கவிதையொன்று

எழுதப்பெறாமாலே முற்றுப்பெற்றது


நான் வரும் வழியில்

எப்பொழுதும் எரிந்து கொண்டோ

புகைந்து கொண்டோயிருக்கும்

மின்மயாணப்புகை போக்கி உணர்த்தும்

வாழ்வின் முடிவின்மையைச்

சொல்லியிருக்கலாம்


சூழலில் கலந்து வரும்

நிண வாடை கலந்த

சுவாசமுணர்த்தும்

நித்யத்தை சொல்லியிருக்கலாம்


மரத்தினடியில் சரிந்து விழுந்திருக்கும்

நாகலிங்கப்பூவின் குவியலை

கூட்டி வாரி குப்பையிலிடுவைதை

காணும் பொழுதுணர்த்தும்

வாழ்வின் அபத்தத்தை சொல்லியிருக்கலாம்


கண்கலங்கி சிரித்து

நா வரண்ட பொழுதும்

உள்ளே உறைந்து போயிருக்கும்

எத்தனையோ ரணங்களின்

இருப்பு உணர்த்தும்

வாழ்வின் இருமையை சொல்லியிருக்கலாம்


மிக நீண்ட இருப்புப்பாதைகளில்

வளைந்தும் நெளிந்தும் செல்லும்

புகைவண்டியின் ………..மற்றும்

குறுகிய சாலைகளில் குவிந்திருக்கும்

மக்களை மாக்களை

லாவகமாய்க்கடந்து செல்லும்

பேருந்துகளின்

சாயலுணர்த்தும் நீர்மையைச்

சொல்லியிருக்கலாம்


இவையத்தனையையும் தாண்டி

என் உள்ளுணர்வும் உணர்த்தும்

உன்னிருப்பை மட்டுமே

எழுத முற்பட்ட

மிக நீண்ட கவிதை

எழுதப்பெறாமலே முற்றுப்பெற்றது

வாழ்வின் எல்லா ருசிகளையும் போல.