Thursday, June 19, 2008

கந்தர்வ நகரம் (கிராமம்) - பகுதி 2

சுமார் தரை மட்டத்தில் இருந்து 1300 அடி உயரம் வந்ததும் மிகப்பெரும் நிலப்பரப்பு, சுற்றிலும் மரங்கள், மரங்கள், மரங்கள் மற்றும் குத்துச்செடிகள், மருந்துக்கு கூட மனிதர்களோ ஆடு மாடுகளோ இல்லை. மனது சட்டென்று மிகப்பெரும் மவுனத்தில் ஆழ்ந்தது போலானாது. நன்பரின் சோலையை தற்போதுதான் தாயார் செய்துகொண்டிருக்கிறார் சுமார் 60 ஏக்கர் ஒரே தளத்திலும் மேலும் 60 ஏக்கர்கள் மற்ற இரண்டு பள்ளத்தாக்குகளிலும் இருப்பதாகக் கூறினார்.

போகும் வழியில் இரண்டு கிராமங்கள் ஓரோர் கிராமத்திலும் மொத்தமும் 11/12 வீடுகளே எல்லாம் கூரை வேயப்பட்ட தாழ்ந்த வாசல்களுள்ள வீடுகள் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகள் அருகிருக்கும் ஊருக்குத்தான் வரவேண்டுமாம்। நாங்கள் சென்ற இடத்திலும் ஒரு கிராமம் மொத்தம் 12 வீடுகள் சுற்றிலும் மரங்கள் மற்றும் மேகங்கள் மேகங்கள் மட்டுமே காட்டிலாக அதிகாரிகள் கூட ஏதாவொதொரு நாள் மட்டுமே வந்து செல்வதுண்டாம்। இந்த மலயை சோலகிரி என்று அழைக்கிறார்கள்



நன்பர் அங்கே 700 சதுர அடியில் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறார் அங்கு ஒரு குடும்பம் தங்குவதற்கான எல்லா வசதிகளும் செய்து வைத்துள்ளார்। உணவு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து அந்த வீட்டில் செய்து தருவதாக ஏற்பாடு.


சுற்றுச்சூழலின் ஓசையற்று காற்று மட்டுமே இரவு பகல் பாராது பேசிக்கொண்டிருக்கும் இதுபோன்ற சூழல் எங்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவத்தை தந்தது। கடைபரப்புவதற்கு மனிதர்களோ கடைகளோ இன்றி பூக்களும், எலுமிச்சையும், சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்வோமே)-வும், வெங்காயமும் காய்த்து தொங்கும் அந்த வனாந்தரத்தில் யாருமே இல்லையென்றாலும் நமக்கே அருகே யாரோ நிற்பது போன்றதொரு உணர்வு அங்கு வீசும் காற்றும் குளுமையான சூழலும் உணர்த்திக்கொண்டேயிருந்தது.


இரவு முழுவதும் அந்த கிராமத்து ஆட்கள் தப்பு (மேளம் போன்ற ஒரு இசைக்கருவி) அடித்துக்கொண்டே இருந்தார்கள். நன்பரிடம் கேட்டதற்கு கொம்பன் வரும் வழக்கமுண்டு எனவே இவ்வறு சப்தம் எழுப்பாவார்கள் எனவும் இந்தச்சத்தம் கேட்டால் யானைகள் வருவதில்லை என்று சொன்னார் என் இளைய மகனுக்கு தூக்கம் போனது. (அப்பா டிரம்ஸ் அடிக்கலையே யானை வந்துட்டா என்று இரவு முழுதும் கேட்டுக்கொண்டே இருந்தான்).



அதற்கும் 300 அடிமேலே மைசூர் மகராஜா 1917ல் அவர் வேட்டைக்கு வந்தால் தங்கி இளப்பாறுவதற்காக கட்டிய ஒரு சிறு வீடும் அவருடைய குதிரைக்காரர்கள் தங்குவதற்காக கட்டி இப்போது பாழடைந்து இருக்கும் ஒரு கட்டிடமும் உள்ளது.









அந்த முகட்டில் இருந்து பார்த்தால் மைசூர் அரண்மணையும் (வெகு தொலைவில் ஒரு புள்ளி வடிவில் தான்) மிக நீண்ட சரிகை பேப்பர் போன்று ஓடிவரும் காவிரியும் சுற்றிலும் பரந்திருக்கும் பள்ளத்தாக்கும் கண்கொள்ளா காட்சி.






நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை வெகு தூரத்தில் தரை இரங்கத்துவங்கியது பின் மெள்ள முன்னேறி எங்களையும் நனைக்கத்துவங்கியது. மழை நின்ற சிறிது நேரத்தில் எதிரே ஆட்கள் கூடத்தெரியாத அளவிற்கு எங்கும் மேகக்கூட்டம் மறக்கமுடியாத அனுபவம்.



இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்பொழுது அங்குள்ள கிராமத்து மக்களிடம் கொஞ்சம் பேசும் வாய்ப்பு கிடைத்தது (வாகன ஓட்டுநர் மொழிபெயர்த்துச் சொன்னார்).

அவர்கள் சோலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மைசூர் மன்னர்களுக்கு மலை சார்ந்த பொருட்களை கொண்டு செல்வதும் அவர் சார்பாக மலை வளைத்தை பாதுகாப்பதுமே அவர்கள் தொழிலாய் இருந்ததாம். தற்போது அவர்கள் தொழில் மலைக்குள் சென்று, தேன், எடுத்து வருவது, கம்பு (தானியம்), மூங்கில், வெங்காயம் போன்றவற்றை பயிரிடுவது, மூங்கிலால் செய்த கூடைகள் செய்து தளத்திற்கு விற்பனைக்கு அனுப்புவது இவைகள் தாம்। மருத்துவ உதவிக்காக இதுவரை ஒருவர் கூட மருத்துவ மனைக்கு சென்றதில்லையாம்। பிறப்பு இறப்பு எல்லாமே அங்கே தான்।

சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது। இன்னும் தன்னை அகழ்ந்தாராய்ந்து கொள்ள அந்த இடம் மிகவும் ஏதுவானத இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பௌர்ணமி இரவில் அந்த உச்சியில் தங்குவது இன்னும் சுகமான அனுபவமாயிருக்கும் என்று நண்பர் சொன்னதால் அப்படி ஓர் நாள் சீக்கிரமே கை கூடவேண்டும் என்ற எண்ணியபடி மலையை விட்டு கீழிறங்கி மக்கள் கூட்டத்தில் கரைந்து போனோம். பெங்களூருவில் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு மல்லேஸ்வரத்தில் அலுமனா மற்றும் மெஜஸ்டிக் காமத் யாத்ரிநிவாஸ் போன்ற எங்கள் வழக்கமான இடங்களில் ஆஜர் கொடுத்து விட்டு சென்னை வந்தாச்சுங்கோ…

Wednesday, June 18, 2008

கந்தர்வ நகரம் - பகுதி 1

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி தொடங்கியது அந்தப்பயணம், மகனின் பத்தாவது பரீட்சை ஆயத்தங்கள் இருந்ததால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வெளியூர் பயணங்களை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தோம். பின் தேர்வுகள் முடிந்ததும் புது வீடு புகு மனைவிழா எல்லாம் கொண்டாடி வீடும் மாற்றியபின் கணவரின் அலுவலகம் மாற்றும் பணி தொடங்கியது. அத்தனையும் முடிந்தபின் எங்காவது சென்று வரவேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருந்ததே தவிர வழக்கம் போன்றே எங்கு செல்வது என்ற குழப்படிகள் இருந்த நேரத்தில் ரங்கமணியின் நண்பருடன் பேசும் போது இதைப்பற்றி சொல்லியிருப்பார் போலிக்கிறது அவர் மிகவும் அக்கறையாக எல்லா ஏற்பாடும் செய்து விட்டு சொன்னபின் தான் எங்கள் பயணம் ஆரம்பித்தது.

மதியம் 2 மணிக்கு மேல் சென்னையில் இருந்து (உச்சிவெயில் மண்டைய பிளந்தது) கிளம்பி இரவு 8.30 மணிவாக்கில் எங்களின் மிகவும் அபிமான நகரமான பெங்களூரை அடைந்தோம். வேற எங்குமே போக வேண்டாம் என்று தோன்றுமளவிற்கு ஊர் மிகவும் குளுமையாகவும் இனிமையாகவும் இருந்தது. (ஆனால் ஆச்சரியம் மெஜஸ்டிக் அலங்கார் பிளாசால கூட்டமே இல்லை – மொத்த மெஜஸ்டிக் ஏரியாவுமே கூட்டமே இல்லாத மாதிரிதான் இருந்தது) அங்கயும் துணை நகரம் ஆரம்பிச்சிரலாம் போல இருக்கு பெங்களூருக்குள் உள்ளே நுழையும் முன்னரே (ஹோசூர் ரோட்டில்) பிரம்மாண்டமான மால்களும் மக்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.. பெங்களூர் மெல்ல இடம் மாறுகிறதோ…
மறுநாள் காலை ஜே।பி நகரில் எங்களுக்கு மிகவும் ப்ரியமான “தாவன்கரே தோசா” ஹோட்டலில் காலை உணைவை முடித்துவிட்டு (அங்கு தயாரிக்கும் தோசை பெங்களூருவில் பொதுவில் கிடைக்கும் ஜவ்வரிசிமா தோசை போலல்லாமல் மிகவும் மொறு மொறுவென்று வெண்ணை தடவி உருளைக்கிழங்கு மாசாலை வைத்து தொட்டுக்கொள்ள காரமாக (!!!) தேங்காய் சட்னியும் தருவார்கள் ஒரு தோசைக்கு மேல் சாப்பிட முடியாதென்றாலும் வழக்கமாய் ஆசைப்பட்டு இரண்டாவது தோசை ஆர்டர் செய்து வீண் செய்வது வழக்கம் - அவ்வளவு நல்லா இருக்கும்.)நண்பரின் சுமோவில் கனகபுரா என்ற ஊரை நோக்கி புறப்பட்டோம் அப்போது கூட நாங்கள் நினைக்கவில்லை அந்த இடம் இத்தனை அழகாய் அமைதியாய் இருக்குமென்று.

கனகபுராவைத்தாண்டி சாத்தனூர் என்ற இடத்தை அடைந்து பிராதனச்சாலையில் இருந்து மெல்ல பிரிந்து சில கிராமங்களைத்தாண்டி சுமோ கரடுமுரடான பாதைகளில் ஏறத்துவங்கியது. பாதை இப்படித்தான் இருந்தது…

இருப்பதிலேயே இது மிகவும் நல்ல பாதை 80 சதவிகிதப்பாதை இதைவிட கரடுமுரடாக இருந்தது பழக்கமுள்ள மற்றும் தாரளமனதுள்ளவர்களால் மட்டுமே இந்தப் பாதையில் காரை எடுத்துக்கொண்டு வரமுடியும்। பல இடங்களில் நாங்கள் சுமோவிட்டு இறங்கிக்கொண்டு நடந்து செல்ல வேண்டியிருந்தது। வண்டியோட்டி மட்டுமே காரை எடுத்துக்கொண்டு சில அடிதூரம் முன்னேறி பின்னர் நாங்கள் போய் சேர்ந்து கொள்வோம்.
பதிவு மிகவும் பெரிதாக உள்ள காரணத்தால் அடுத்த பதிவில் தொடர்கிறேன்

Monday, June 16, 2008

கவன ஈர்ப்பும் தப்பித்தலும்


சில வேளைகளில், எழுதத்துடிக்கும் மனதை, ஏதோவொன்று, கட்டிப்போடும்,கணணி இல்லை,இணையம் இல்லை, நேரமில்லை என்று எத்தனையோ இல்லைகளை பட்டியலிடும் மனதின் ஒரு மூலையில் தன்குரலென்று ஒன்று ஒலித்துக்கொண்டேயிருக்கும் உனக்கு அதற்கான தீவிரமான ஆர்வங்கள் ஏதுமில்லையென்று.

தாட் தாட் தாட்டென்று இராஜகுமாரன் கதை சொன்ன அப்பாவின் மடியில் படுத்து கதை கேட்ட சந்தோஷங்கள் எப்போதும் அதை மற்றவர்க்கு சொல்லும்போதிருந்ததில்லை. வானொலியில் இசையும் கதையும் கேட்டுவிட்டு அதன் குரலசைவில் மயங்கித் திரிந்த இன்பம் அதை தன்குரலில் தோழியற்கு மறுபடியும் சொன்னபோதிருந்ததில்லை. கதைசொல்லிகளின் கதைகளிலிருந்த ஆர்வத்தை எனக்கான கதை பண்ணும் ஆர்வம் எப்போதும் ஈர்த்ததில்லை. ஆழ்ந்த மவுனங்களைத்தரும் வாசிப்புக்களின் அனுபவத்தை நீண்ட வாசகங்கள் கொண்ட என் எழுத்துக்கள் எப்போதும் ஜெயித்ததில்லை. உள்ளே குரல்களற்ற நிமிடத்தில் எதையும் செய்ய வேண்டாமெனும் நேரத்தில் கண்மூடி என்னுள்ளே காணும் பிம்பத்திலும் படிக்காமல் தொலைந்துபோன புத்தகங்களின் சாயல்கள் என் குழவியின் முத்தத்தையும் வெற்றாக எதிர்கொள்ள வைக்கிறது.

இத்தனை இருந்திருந்தும் இன்றெதெற்கிந்த பதிவு.. என்னையும் பதிவுலகம் மறக்காதிருப்பதற்கு மட்டுமின்றி வேறெதெற்கு…..

இப்படின்னு எழுதனும்னு ரொம்ப ஆசைங்க .. ஆனா அதில்ல நிசம்… கிட்டத்தட்ட சொர்க பூமி மாதிரி ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துட்டு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சேனா.. அது கூட படம் காட்டலாமின்னு காமராவை எடுத்தா “லோ பேட்டரி.. சேஞ்ச் பேட்டரி” அப்படின்னு சொல்லிட்டு தூங்கிப்போச்சு.. அதான் சரி எதையாவது போட்டே ஆகனுன்னு ஒரு கொலை வெறி எத்தனை நாள்தான் ஒங்களையெல்லாம் நிம்மதியா இருக்கவிடுறது… அதான்…..

கூடிய சீக்கிரம் வரேன்.. அந்த இடம் பத்திச்சொல்ல…