Monday, December 24, 2007

நான் லீவுங்கோ.......

ஒரு வாரம் நான் லீவுங்கோ. அதனாலே பதிவில்லை (மக்கள்ளாம் வருத்தப்படாதீங்க வந்து சேர்த்து போடரேன்)

அப்புறம் ஒரு வாரமா பதிவு பக்கம் வரலங்கரதுக்காக சர்வேசன் போட்டில பரிசு கிடைச்சதுக்கு பாராட்டாம விட்டுடாதீங்க!!!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(பி.கு) தவழ்ந்து விளையாடும் தாமிரபரணிக்கரையோரமா.... வங்கக்கடலின் தென்முனையோரமா..... அப்புறம் முடிந்தால் மலையாளக்கரையோரமா... என்று ஏகப்பட்ட பிளான் இருக்கு வந்து சொல்கிறேன் எது முடிந்தது எது முடியாமல் போனதென்று...

மீண்டும் வாழ்த்துக்களுடன்

Saturday, December 22, 2007

ஆளுமை


எனக்கு அன்னியமான இடங்களில்
உன் இருப்புக்கள்
என்னுள் பல கேள்வியை எழுப்பலாம்.

அழைப்புக்களை ஏற்க மறுக்கும்
உன் தொலைபேசி சினுங்கல்கள்
எனக்கு ஏதேனும் சேதி சொல்லலாம்

என் சுவைகளின் மீதான
உன் வெறுப்புக்கள்
என்னை வேற்றுமை படுத்தலாம்

உன் நன்பர்களின் மீதான
உன் பற்றுதல்கள்
என்னில் வெறுமையைத்தூண்டலாம்

என் ஆளுமைகளற்ற
உன் நேரங்கள்
என் முகமூடிகளை கிழித்தெறியலாம்

ஏனெனில் நீ நான் நாம் எனும் தளங்களில்
நான் என்றும் சந்தோஷமாய்

Friday, December 21, 2007

முதன் முதலில் ஒரு மொக்கை - பரீட்சையும் நானும்


எல்லாரையும் போல எனக்கும் பள்ளிக்கூடம் பிடிக்கும், பாடம் பிடிக்கும் ஆனா பரீட்சை பிடிக்காது। நாம யாருங்க? எவ்வளோ பெரியவங்க? புத்திசாலி! இந்த பீசாத்து 3 மணி நேர பரீட்சையா நம்ம புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய முடியும்?? தேர்வுக்கு ஒரு நாள் முன்ன படிக்க அதாவது புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்வதேடு சரி. அப்பா அம்மா கேக்கும் போதெல்லாம் ம் படிச்சிட்டேன்॥ இல்ல இந்த தடவ நல்ல மார்க் வரும்.. ஆமா போனதடவ மாதிரி இல்ல என்ற வழக்கமான டயலாக் எல்லாம் விட்டுட்டு ஒரு மாதிரி பொழுத கழிச்சிட வேண்டியது. ஸ்கூலுக்கு போய் கொஸ்டியன் பேப்பர் வாங்கினதும் நம்ம மார்க் கொண்டுபோய் கொடுத்ததும் அம்மா அப்பா முழிப்பாங்களே அந்த மாதிரி திரு திருன்னு முழிக்க வேண்டியது ஏதோ 3 மணி நேரம் கஷ்டப்பட்டு தெரிஞ்சதை, தெரியாததை எழுத வேண்டியது அல்லது எழுதரமாதிரி நேரம் கடத்த வேண்டியது அப்பறம் பிரண்ட்ஸோட (கேள்வித்தாள் பற்றி பேசாத பிரண்ட்ஸோட) வீட்டுக்கு வந்து அடுத்த பரீட்சைக்கு படிக்க???? வேண்டியது. 10 நாள் கழிச்சு மார்க் வந்தா என்ன ஆகும் தனியா வேற சொல்லணுமா??? அப்பா ஒன்னும் அதிகம் சொல்ல மாட்டாரு ஆனா அம்மா அடுத்த பரீட்சை வரைக்கும் சொல்லிக்காட்டிக்கிட்டே இருப்பாங்க அப்பெல்லாம் ரெண்டு காதும் ஒழுங்கா வேலைசெய்யும் அதாங்க இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்றவேண்டியதுதான். அதிலும் கதை புஸ்தகம் எடுத்தா சரியா மாட்டுவேன் ஆனா இதெல்லாம் நம்ம அறிவு பசிக்கு??? தடை போடுமா என்ன? அதுக்கப்பறம் ராத்திரி 2 மணிக்குத்தான் எங்களுக்கு படிகிற மூடு வரும் ஏன்னா அப்பத்தான் அதிகம் தொந்தரவு இல்லாம கதை புஸ்தகம் வாசிக்கலாம். அம்மா ஒரு தடவையோ ரெண்டுதடவையோ தான் எந்திருச்சி வருவாங்க அதுக்குள்ள நாம எவ்வளோ படிச்சிறுவோம்…??? படிச்சி முடிச்சி ஏதோ பாஸ் பண்ணி பெரியாளா ஆயாச்சி!!!!.

ஆனா இப்பத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு அப்ப ஒழுங்கா படிச்சிருக்கலாமோன்னு அடிக்கடி தோணுது ஏன்னா இப்ப என் பசங்களுக்கு பரீட்சைனா நாந்தான் படிக்கறேன் ஒரு பாடம் விடாம எங்கிட்ட கொஸ்டியன் பேப்பர் குடுத்தா நல்லா மார்க் வரும் போல இருக்கு அவங்க படிக்க ஒக்கார்ந்தா கூடவே நானும் படிக்க ஒக்காரரேன் ஏன்னா எனக்குத்தான் தெரியுமே எப்படி படிப்பாங்கன்னு.. ம்ம்ம் எல்லாம் நேரம்தான்.

(மிகவும் பிரயத்தனப்பட்டு முதன் முதலில் ஒரு மொக்கை பதிவு அதுவும் பழகு தமிழில் எழுதியிருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லிடுங்க தங்கங்களா)

Wednesday, December 19, 2007

கேள்விகள் - பெரும்பான்மையானவர்கள் தங்கள் விமர்சனங்களை உரத்து வெளிப்படுத்துவது ஏன்??



சமீப காலங்களில் என்னுள் புகைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்வி இது. இதற்கு பல பரிமாணங்களில் பதில்கள் இருக்கும் என்றாலும், இது தான் சரி இது தவறு என்று வரயறுத்து பதில் கூற முடியாத கேள்வியாக இருந்தாலும், நம்முள் ஒரு உரத்த சிந்தனையை கிளர்த்து எழுப்ப முடியும் என்றால் அது தான் இக்கேள்வியின் நோக்கமாயிருக்க முடியும்

  1. எந்த ஒரு தனிமனித முயற்சிக்கும் பெரு, சிறு-பான்மை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கருத்து, செயல் சுதந்திரங்கள் உண்டு என்ற கருத்துக்களோடு ஒப்புமை இல்லாதது
  2. மிகவும் உரத்து சொல்வதால் நாம் எளிதாக கவனிக்கப்படுவோம் என்ற உள்மன விழைதல்கள்
  3. தடித்த வார்த்தைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே நம் கருத்துக்களை மற்றவர் முன் நிலைநிறுத்தும் என்ற தவறான முடிவுகள்
  4. ஒப்புமை இல்லாத செயல்களை, கருத்துக்களை, முயற்சிகளை மௌனமாய் அலட்சியம் செய்வது கூட புறக்கணிப்பின் அடையாளம் என்று அறிந்துகொள்ளாதது
  5. எந்த ஒரு வெளிப்பாடுகளிலும் புறம் தாண்டிய அகத்தை தேடி உணரத்தலைப்படுவது
  6. பேருண்மைகளைத்தாண்டிய இயல்புகளை ஏற்றுக்கொள்ளும் எளிமை இல்லாதது
  7. மாற்றுக்கருத்துக்களுக்கான தடங்களை நேசிக்கத்தலைப்படாதது
  8. தான் மட்டுமே என்ற தனிமனித உணர்வுகளோடு மட்டுமே உறவு கொள்வது…


இதற்கான பதில்கள் நீண்டுகொண்டே போகும்.. நான் முன்பு கூறியது போல் இக்கேள்விகள் அதற்கான பதிலின் தேடல்கள் நம்முள் மனிதத்தை மேன்படுத்த பயன்படுமானால் கேள்விகள் வாழ்வின் படிக்கட்டுக்கள் ஆகும் தானே..

Friday, December 14, 2007

கேள்விகள் – ஒரு சங்கிலித்தொடர் பதிவு


கேள்விகள் ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பித்து விடும் அதற்கான் முஸ்தீபுகள், சில சமயம் மூக்குகூட அரிக்க ஆரம்பித்து விடும். நம் கேள்விக்கான முழு வடிவம் கிடைக்கும் வரையிலான நேரங்கள் மிகவும் சோதனையானவை. உள்ளே ஆழ் மனதில் தொக்கி நிற்கும் அந்த கேள்வி சில சமயம் புகையாய் மட்டுமே தோன்றும். தொடர் தேடல்கள் மூலமாகவோ, அல்லது நினைவுச்சங்கிலியின் பின்னோக்கிய பயணங்களின் மூலமாகவோ, அல்லது எதுவும் முயன்று திருப்தி அளிக்காத கண்டுபிடிப்புக்களின் கடைசியில் வாளாயிருப்போம் என்று மனதை வேறு திசை திருப்பிய கணங்களிலோ அந்த கேள்விகள் பளிச்சென தோன்றும். சில சமயம் புறக்கணிக்கக்கூடியவையாய் இருந்தாலும் பல நேரங்களில் பதில் தேடக்கூடியதாகவே இருக்கும். அந்த பதில்கள் என்னையோ இல்லை யாரையோ கூட சுற்றியிருக்கலாம்.

மனிதம் பற்றிய என் விழிப்புணர்வுகளுக்கு பசியெடுக்கும் போதெல்லாம் நான் ஏதாவது உண்ணத்தந்தே ஆகவேண்டும் எனும்போது எனக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் சிற்றுண்டி (உப்புமா, தோசை போல) கேள்விகள் மட்டுமே. என் முன்னிற்கும் கேள்விகளுக்கான விடைகள் மிகத்தொலைவிலோ அல்லது எனக்குள்ளேயோ குவிந்து கிடக்கும் ஆனாலும் எடுத்து உண்ணும் அந்த பசி மிகுந்த கணங்கள் மிகவும் சுவாரசியமானவை.

அந்த சுவாரசியத்தை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.. அவ்வப்போது என் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இணைந்து தேடலாம் அதற்கான பதிலை. உடன் பயணிக்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, December 11, 2007

பெண்ணியம்


அப்படி ஒரு தொலைபேசி அழைப்பை நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லைதான். தினமும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான அரைமணி நேரம் மட்டுமே எங்கள் கணவன் மனைவிக்கான நேரம். பிறகு என்னவள் தன் 7 மணி பேருந்தில் அலுவலகம் சென்றால் இரவு 8 மணிக்குத்தான் திரும்புவாள். என் அலுவலகம் 9 மணிக்குத்தான் என்றாலும் நானும் 7.20 பேருந்தை பிடித்துச் சென்றால்தான் காலை உணவை அலுவலக சிற்றுண்டிச்சாலையில் முடித்துவிட்டு சரியான நேரத்தில் பணியிடத்தில் அமர முடியும். இருவரில் ஒருவர் எங்களுக்கான இரவுச்சாப்பாட்டை வாங்கிக்கொண்டு இருவரும் வீடு வந்து சேர எப்படியும் மணி இரவு ஒன்பதைத்தொட்டுவிடும். இதனால் எங்கள் வீட்டில் சமையல் என்னும் ஒரு நிகழ்ச்சி அநேகமாக மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்று. எனவே எங்கள் வீடு எனக்கு ஒரு தங்கும் விடுதியாக மட்டுமே தோன்றியது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லது வீட்டுச்சூழலில் வளர்ந்த எனக்கு இது கொஞ்சம் புதியதாய் தோன்றியதில் தவறில்லைதானே. வார இறுதி நாட்கள் அநேகம் நாங்கள் நன்பர்களின் வீட்டிலோ அல்லது அருகிலிருக்கும் கேளிக்கை தளங்களுக்கோ சென்று எங்கள் இல்வாழ்க்கையை கழித்து வந்தோம்.

எங்கள் திருமண வாழ்வின் இரண்டாம் வருடம் கூட இப்படியே ஒரு மாற்றமுமில்லாமல் செல்வதில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு ஆனாலும் அவளிடம் இதைப்பற்றி பேசுவதற்கு சில தயக்கங்களும் உண்டு, ஏனெனில் அவள் நல்ல திறமைசாலி, அவள் திறமையை புரிந்துகொண்டு கொண்டாடும், நல்ல சம்பளம் தரும் ஒரு அலுவலகத்தில் பணி புரிவதால் அந்த வேலயை விடுவதற்கோ, அல்லது பணிமாற்றத்திற்கு தலைப்படுவதோ அவளால் முடியாததாய் இருந்தது, அதனால் என் எதிர்பார்ப்புக்களை சில சமயம் சாடை மாடையாய் சொல்லத்தலைப்பட்ட போதும் அவள் உடனே தன்னுடன் பணிபுரியும் மற்ற பெண்களின் கணவர்மார்களின் ஆளுமைத்தன்மை பற்றியும் அதனால் அவர்கள் படும் இன்னல் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவதால் நான் என் “நல்ல” பெயரை தக்க வைத்துக்கொள்ளவாவது வாளாயிருந்துவிடுவது என் வழக்கம்.

ஆனாலும் ஒரு மாற்றத்திற்காக, ஒரு குழந்தைக்காக, ஒரு இனிய வீட்டுச்சூழலுக்காக நான் மிகவும் எதிர்பார்க்க தொடங்கிய வேளயில்தான் அந்த தொலைபேசி வந்தது. பேசியது அவளின் தாயார், அவளின் தந்தையார் உடல் நிலை காரணமாக இங்கு சென்னையில் தங்கி 6 மாதத்திற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும் அதனால் எங்களுடன் தங்குவதே ஒரே வழி என்றும் சொன்னபோது மிகவும் மகிழ்ந்து போனேன். இது தான் ஒரே வழி இந்த தருணத்தில் அவளின் வேலை மாற்றத்தை பற்றி ஒரு முடிவுக்கு வரச்சொல்லலாம், எங்கள் வீடு ஒரு தங்கும் விடுதி என்ற தளத்தில் இருந்து இல்லம் என்ற தளத்திற்கு வரும் என்ற எண்ணத்தோடு அவளிடம் இது பற்றி சொன்னபோது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒரு தீர்வைச்சொன்னாள்.

அதாவது அவளின் தாய் தந்தையரை தங்கும் விடுதி வசதிகளோடு கூடிய மருத்துவ மனையில், செவிலியர்கள் துணையோடு சேர்த்து பார்த்துக்கொள்வது???? என்றும், நாங்கள் இருவரும் வாரம் இருமுறையோ அல்லது முடியும் போதெல்லாமோ சென்று பார்த்து வருவது என்றும் சொன்னாள்। அதற்கான நியாயமான! காரணங்களாக அவள் ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே சென்றபோதும் என் நாட்டுப்புற மூளைக்குள் எதுவுமே பதியவில்லை.


அவர்கள் முதியவர்கள் வீட்டுச்சூழல் மட்டுமே அவர்களுக்குப்பொருந்தும், இது தான் நாம் அவர்களுக்கு உதவி செய்யும் தருணம் போன்ற என் எந்த சமாதனங்களுக்கும் அவள் செவி சாய்ப்பதாய் இல்லை, அதிகம் சொன்ன போது அவர்கள் என் பெற்றோர் தான் எனவே என்னைப்புரிந்து கொள்வார்கள் என்று என்னை சமாதனம் வேறு செய்தாள்.

இந்த சூழலில் தான் வேறு வழியில்லாமல் நான் இந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதாயிற்று.

01. என் தற்போதைய வேலயில் இருந்து என்னை விடுவிக்கச் சொல்லி கடிதம் எழுதிவிட்டு ஒரு பகுதி நேர வேலயை தேடிக்கொண்டேன்.
02. ஒரு நல்ல மகளீர் தங்கும் விடுதிபார்த்து அவளுக்கு 6 மாத முன் பணம் செலுத்தி தங்கும் அறை ஏற்பாடு செய்தேன்.
03. அவள் அம்மா அப்பாவிடம் அவள் 6 மாதங்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்க வேண்டியுள்ளதால் வேறு ஊரில் இருப்பதாயும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வாள் என்றும் பொய் சொல்ல துணிந்தேன்.
04. என் மாமனார் மாமியாருக்கு மகனாய் இருக்க துணிந்தேன்.
05. நான்கு சுவர்களாலான கட்டிடத்தை சிறு சிறு தியாகங்களோடு கூடிய ஒரு அன்பான வீடாக்க முடிவுசெய்தேன்.

“தங்கும் விடுதிகளும், விதிமுறைகளும் அனுபவங்களும் எல்லோர்க்கும் ஒன்றுதானே” அவளும் புரிந்துகொள்வாள். நான் முன் கை நீட்டிவிட்டேன்… முழங்கை நீளும் தானே…..